கார்த்திகைத் தீபம் – யாழ். பல்கலைக்கழக மாணவன் கைதாகி விடுதலை

யாழ். பல்கலைக்கழகத்தின் பிரதான வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்றிய மாணவர் கைது செய்யப்பட்டு கடும் எச்சரிக்கையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

விஞ்ஞானபீட மாணவனான மசகையா தர்ஷிகன் என்பவரே இவவாறு கைதாகி விடுதலையானார். கார்த்திகை தீபத் திருநாளான நேற்று பல்கலைக்கழகத்தின் நுழைவு வாயிலில் தீபங்களை ஏற்ற மாணவர்கள் சேர்ந்தனர். ஆனால், அவர்களை அங்கு குவிந்த படையினரும் பொலிஸாரும் தடுத்தனர்.

இந்நிலையில், தீபம் ஏற்றினால் கைது செய்யப்படுவீர்கள் என்று பொலிஸார் மிரட்டினர். அத்துடன் விடுதிகளில் தீபங்களை ஏற்றுமாறு பொலிஸார் தெரிவித்தனர்.

இதை மீறி தீபம் ஏற்றிய மாணவரை பொலிஸார் கைது செய்தனர். இதையடுத்து துணைவேந்தர் எஸ். சிறீசற்குணராசா கோப்பாய் பொலிஸாருடன் தொடர்பு கொண்டு மாணவனை விடுதலை செய்யுமாறு கேட்டிருந்தார்.

இதேவேளை, சட்டத்தரணிகள் வி.திருக்குமரன், வி.மணிவண்ணன் ஆகியோர் பொலிஸ் நிலையத்துக்கு சென்று மாணவனை விடுதலை செய்வதற்கான நடவடிக்கையை எடுத்தனர்.