வடமராட்சியில் வாள்வெட்டு குழு அட்டகாசம் – இளைஞரை காணவில்லை! முதியவர் ஒருவர் படுகாயம்

பருத்தித்துறையில் வாள்வெட்டுக் கும்பலின் அட்டகாசத்தில் இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார் என்றும் முதியவர் ஒருவர் படுகாயமடைந்தார் எனவும் தெரியவருகின்றது.

மேலும், இந்தக் குழுவினர் மூன்று வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்த பெறுமதியான பொருட்களை அடித்து நொறுக்கினர் என்று பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற இந்தச் சம்பவங்கள் தொடர்பில் மேலும் அறியவருபவை வருமாறு:

பருத்தித்துறை வல்லிபுரக்குறிச்சி சிங்கைநகர் பகுதியில் ஒருவருக்கு சொந்தமான வயல் காணில் ஒரு குழுவினர் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டு வந்துள்ளனர். காணியின் சொந்தக்காரர் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தார். இதனால், ஆத்திரமடைந்த சட்டவிரோத கும்பல் வாள்களுடன் காணி உரிமையாளரின் வீட்டுக்கு சென்று மிரட்டினர்.

இது தொடர்பில் அவர் பொலிஸில் முறையிட்டார். ஆனால், பொலிஸார் உடனடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று முறைப்பாட்டாளர் குற்றஞ்சாட்டியிருந்தார். இந்நிலையில், நேற்று நள்ளிரவு முறைப்பாட்டளரின் வீட்டிற்குள் வாள்களுடன நுழைந்த கும்பல் அங்கு எவரும் இல்லாத நிலையில் அங்கிருந்த மோட்டார் சைக்கிள், தொலைக்காட்சி உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை அடித்து நொறுக்கியது.

முன்னதாக மாலையில் வாள்களுடன் வந்து மிரட்டியதால் அச்சமடைந்தவர்கள் அயல் வீட்டில் தஞ்சமடைந்திருந்தனர். இந்நிலையில் அந்த வீட்டுக்கும் சென்ற வாள்வெட்டுக் கும்பல் அந்த வீட்டின் முதியவரை கடுமையாகத் தாக்கியது. இதில் படுகாயமடைந்த சின்னத்துரை துரைராசா (வயது – 68) படுகாயமடைந்து பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுதவிர மற்றொரு அயல்வீட்டுக்கு சென்ற கும்பல் அந்த வீட்டின் கதவுகளையும் கொத்தி சேதமாக்கிவிட்டுச் சென்றது. இந்நிலையில், மணல் அகழும் காணி உரிமையாளரின் குடும்பத்தை சேர்ந்த கிருஸ்ணபிள்ளை பிரதீபன் (வயது 24) என்பவரை நேற்று மாலை முதல் காணவில்லை என்று குடும்பத்தவர்கள் தெரிவித்தனர்.

குடிதண்ணீர் எடுப்பதற்காக சென்ற அவர் காணாமல் போன நிலையில் முராவில் பகுதியில் அவர் சென்ற மோட்டார் சைக்கிள் சேதமடைந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை அவர் தொடர்பான தகவல்கள் எதுவும் தெரியவில்லை. இதேவேளை, காணாமல் போனவர் சென்ற மோட்டார் சைக்கிளை சேதமாக்கியதாகக் கூறப்படும் டிப்பர் வாகனத்தை பருத்தித்துறை பொலிஸார் பிடித்துள்ளனர் என்று கூறப்பட்டது.