மஹர சிறையில் வன்முறை; 4 கைதிகள் சுட்டுக்கொலை! 25 பேர் படுகாயங்களுடன் ராகம வைத்தியசாலையில்

மஹர சிறைச்சாலையில் நேற்று மாலை தொடக்கம் நள்ளிரவு வரை தொடர்ந்த வன்முறைகளில் 4 கைதிகள் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 25 கைதிகள் படுகாயமடைந்துள்ளனர்.

மஹர சிறைச்சாலையில் கொரோனாத் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுவரும் நிலையில், தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த நாள்களாக கைதிகள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று கைதிகள் பலர் சிறைச்சாலைக்குள் தீவைத்து சிறையின் பிரதான வாயிலை உடைத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச்செல்ல முயற்சித்த போது சிறைக் காவலர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

கைதிகளிடையே ஏற்பட்ட வன்முறை மோதல்களைத் தொடர்ந்து அங்கு நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டனர் என்று பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹணதெரிவித்தார்.

ஆனால், நேற்று நள்ளிரவு வரை அங்கு அமைதியின்மை நிலவி வருகின்றது எனவும், சிறைக்குள் இருந்து அடிக்கடி துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்கள் கேட்கின்றன எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

நேற்று நள்ளிரவு வரை சிறைச்சாலைக்கு முன்னால் கைதிகளின் உறவினர்கள் கூடியுள்ளமையால் அந்தப் பகுதியில் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது எனவும் அப்பகுதி மக்கள் கூறினர். சிறையில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த அங்கு தீயணைப்பு படையினரும், கடற்படையினரும் வரவழைக்கப்பட்டனர் என்றும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டார்.