யாழில் கைதான அருட்தந்தை பிணையில் விடுவிக்கப்பட்டார்

பொலிஸாரால் நேற்றுக் கைது செய்யப்பட்ட புனித மருத்தினார் குருபீடத் தின் முதல்வரான அருட்தந்தை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தால் நேற்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் மாலை 5.50 மணியளவில் யாழ்ப்பாணம் ஆயர் இல்லத்துக்கு அருகிலுள்ள புனித மருத்தினார் குருபீடத்துக்கு முன்பாக மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்குத் தயாராகிய வேளை அவர் கைது செய்யப்பட்டார்.

இளவாலையைச் சேர்ந்தவரும்புனித மருத்தினார் குருபீடத்தின் முதல்வருமான அருட்தந்தை பாஸ்கரனே யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத் தடை உத்தரவை மீறி பொதுவெளியில் நினைவேந்தலை நடத்த முயன்றமை உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகளை முன்வைத்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் அவர் முற்படுத்தப்பட்டார்.

அருட்தந்தை சார்பில் சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம் முன்னிலையாகினார். சந்தேக நபர் சார்பில் பிணை விண்ணப்பத்தை முன்வைத்து அவர் சமர்ப்பணம் செய்தார். பிணைக்குக் கடும் ஆட்சேபனை தெரிவித்த பொலிஸார், சந்தேகநபருக்கு வெளிநாடுகளிலிருந்து நிதிப் பங்களிப்பு கிடைப்பது தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் மன்றுரைத்தனர்.

எனினும், அருட்தந்தையை ஒரு இலட்சம் ரூபாய் ஆள் பிணையில் விடுவிக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் வழக்கு விசாரணை எதிர்வரும் மார்ச் மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டது.