பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஊடாக, சகல மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வேன் – அமைச்சர் சரத் வீரசேகர

இலங்கை வாழ் மக்களைப் பாதுகாப்பதே, இன்றைய காலகட்டத்தின் கட்டாயத் தேவை. அந்த வகையில், எனக்கு வழங்கப்பட்டுள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுப் பதவியை, பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் நன்மை கருதி மிகப்பொறுப்புடன் வழி நடாத்திச் செல்வேன். அத்துடன், அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வேன் என, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கலாநிதி சரத் வீரசேகர தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ் முன்னிலையில், வியாழக்கிழமை முற்பகல் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராக சத்தியப் பிரமாணம் செய்துகொண்டார்.

இதனையடுத்து, மாலை சமயத் தலைவர்களைச் சந்தித்து, அவர்களின் ஆசிர்வாதங்களையும் பெற்றுக்கொண்ட பின்னர், அமைச்சர் சமயத் தலைவர்கள் முன்னிலையில் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கருத்துத் தெரிவிக்கும்போது, “எனக்கு வழங்கப்பட்டுள்ள இந்த அமைச்சுப் பதவியை, மிகவும் அர்ப்பணிப்புடன் நிறைவேற்றுவேன். இந்தப் பொறுப்பு எனக்காக அல்ல, பொதுமக்களுக்காக எனக்கு வழங்கப்பட்டுள்ள மிகப் பொறுப்பு வாய்ந்த சேவையாகும். இச்சேவையின் மூலம், இலங்கை வாழ் சகல மக்களினதும் தேவைகளைப் பூர்த்தி செய்வேன். அத்துடன், அவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வேன்” என்றார்.