உதைபந்தாட்ட நட்சத்திரம் மரடோனா திடீரென மரணம்

ஆர்ஜென்டினாவைச் சேர்ந்த உலகின் மிகச்சிறந்த உதைபந்தாட்ட ஜாம்பவான்களில் ஒருவரான டியாகோ மரடோனா தனது 60 வயதில் நேற்று காலமானார். ஆர்ஜென்டினா தலைநகர் ப்யூனோஸ் அயர்ஸ் பகுதியில் உள்ள அவரது வீட்டில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர்பிரிந்தது.

மரடோனாவுக்குக் கடந்த நவம்பர் மாதம் மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு வெற்றிகரமான அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனையடுத்து அதிகளவுக்கு போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி இருந்த அவருக்கு அதற்கான சிகிச்சை வழங்கப்பட இருந்த நிலையில் நேற்று உயிரிழந்தார்.

1986-ஆம் ஆண்டு ஆர்ஜென்டினா உலகக் கோப்பை உதைபந்தாட்டப் போட்டியை வென்றபோது மரடோனா அந்த அணியின் கப்டனாக இருந்தார். இந்தப் போட்டியில் ஆர்ஜென்டினா அணி இறுதிப் போட்டியில் நுழைவதற்கு இங்கிலாந்துக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் மரடோனா அடித்த கோல் காரணமாக இருந்தது. புகழ்பெற்ற அந்தக் கோல் பலராலும் இன்றும் பேசப்படுகிறது.

இதேவேளை, மரடோனாவின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்து ஆர்ஜென்டினா கால்பந்து சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. எங்கள் வழிகாட்டியான நீங்கள் எப்போதும் எங்கள் இதயங்களில் இருப்பீர்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரடோனா ஆர்ஜென்டினா அணிக்காக மட்டுமன்றி கிளப் போட்டிகளில் பார்சி லோனா மற்றும் நபோலி அணிகளுக்காகவும் விளையாடி பல சம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். அர்ஜென்டினாவுக்காக 91 போட்டிகளில் விளையாடிய மரடோனா 34 கோல்களை அடித்தார்.

அத்துடன் நான்கு உலகக் கோப்பைப்போட்டிகளில் பங்கேற்றும் ஆர்ஜென்டினா அணிக்குத் தலைமை தாங்கியும் அவர் தனது சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தினார். 1990 இல் இத்தாலியில் நடந்த இறுதிப் போட்டிக்கு ஆர்ஜென்டினா அணியை அழைத்துச் சென்றதில் மரடோனாவின் பங்கு அளப்பரியது. எனினும் இந்த இறுதிப் போட்டியில் மேற்கு ஜெர்மனியிடம் ஆர்ஜென்டினா தோல்வியடைந்தது.