யாழ்ப்பாணம், கிளிநொச்சியில் 12 பேருக்கு தொற்று – 7 பேர் கடற்படையினர்

கிளிநொச்சி மாவட்டத்தில் 5 பேருக்கும் காங்கேசன்துறை கடற்படை முகாமைச் சேர்ந்த 7 பேருக்கும் நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

கிளிநொச்சி பாரதிபுரத்தில் வசிப்பவரும் 55ஆம் கட்டையிலுள்ள ஒயில் கடையில் பணியாற்றும் முதியவர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கடந்த திங்கள்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.

இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் அவருடன் பணியாற்றியோர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களது மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களில் வயோதிபரின் மருமகன் உறவுமுறையான ஒருவருக்கும் வயோதிபருடன் ஒயில் கடையில் பணியாற்றும் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டது.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகமாகக் காணப்படும் மேல் மாகாணத்துக்குச் சென்று குடிதண்ணீர்ப் போத்தல்களை எடுத்து வந்து கிளிநொச்சி மாவட்டத்தில் விநியோகிக்கும் முகவர் நிறுவனத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கும் கொரோனா தொற்று நேற்று உறுதிப்படுத்தப்பட்டது.

வயோதிபருக்கு கொரோனா தொற்றுள்ளமை பி.சி.ஆர். பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அவரது கடையில் பாரவூர்திகளின் சாரதிகள், உதவியாளர்கள் ஒயில் வாங்க வந்து செல்கின்றனர். அவர்களில் ஒருவரால் வயோதிபருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது.

இந்நிலையில் குடிதண்ணீர்ப் போத்தல்களை மேல் மாகாணத்திலிருந்து எடுத்து வந்து கிளிநொச்சியில் விநியோகிக்கும் அந்த மாவட்டத்தில் வசிக்கும் மூவர் வயோதிபர் பணியாற்றும் ஒயில் கடைக்கு அருகில் கடை வைத்திருந்தனர்.

அவர்கள் மேல் மாகாணத்துக்குச் சென்றிருந்த நிலையில் மீள அழைக்கப்பட்டு மாதிரிகள் பெறப்பட்டன. அவர்கள் மூவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. காங்கேசன்துறை கடற்படை முகாமில் கடமையாற்றும் சிப்பாய்கள் 7 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை நேற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 3 நாள்களில் 10 சிப்பாய்களுக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.