ஜனாதிபதி இரண்டு முறை அரசமைப்பை மீறிவிட்டார் – சபையில் அநுரகுமார சுட்டிக்காட்டு

சீனாவுடன் இலங்கை அரசு செய்துள்ள 450 ஏக்கர் முதலீட்டு உடன்படிக்கை என்ன என்பதையும், இந்தத் தொழில்சாலையின் உற்பத்தி தேசிய சந்தையை இலக்கு வைக்குமா? என்பதையும் அரசு சபைக்கு அறிவிக்கவேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி இரண்டாவது முறையும் அரசமைப்பை மீறிவிட்டார் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். பாதுகாப்பு அமைச்சின் நிதியொதுக்கீடுகள் – பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கும் 32 நிறுவனங்களின் நிதியொதுக்கீடுகள் தொடர்பான விவாதம் இடம்பெறும் நிலையில் அமைச்சுக்குப் பொறுப்புக்கூறக்கூடிய அமைச்சர் சபையில் இல்லாதமையானது பாராளுமன்றம் தொடர்பில் ஜனாதிபதியின் பொறுப்பற்ற தன்மையையே வெளிப்படுத்துகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம் பெற்ற 2021 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் அதிகாரத்துக்கு கீழ் செயல்படும் நிறுவனங்களுக்கான நிதியொதுக்கீடுகள் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும்போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஆட்சிக்குவர முன்னர் கொடுத்த வாக்குறுதிகள் அவரால் மீறப்பட்டுள்ளன. அதேபோன்று அரசமைப்பை அவர் இரு சந்தர்ப்பங்களில் மீறியுள்ளார். 20 ஆவது திருத்தத்துக்கு முன்னர் அரசமைப்பின் பிரகாரம் ஜனாதிபதியால் எந்தவொரு அமைச்சையும் கையாள முடியாது.

ஆனால் அவர் பாதுகாப்பு அமைச்சை தன்வசம் வைத்திருந்தார். இதேபோன்று ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதிவரை இடைக்கால கணக்கறிக்கை மூலம் நிதியொதுக்கப்பட்டது. அதன்பின்னர் பாராளுமன்றத்தில் நிதி அதிகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டிருக்கவில்லை. எனினும் அரசமைப்பின் சில திருத்தங்களைக் காட்டி ஜனாதிபதியால் நிதி அதிகாரங்களைக் கையாள முடியும் எனக் கூறினர்.

அதனை ஏற்றுக்கொண்டாலும் கூட ஜனாதிபதியால் கடன்களைப் பெற எந்தவொரு அனுமதியும் இல்லை. ஆனால் ஏப்ரல் மாதம் தொடக்கம் ஓகஸ்ட் மாதம் வரை 690 மில்லியன் ரூபா கடன்களை ஜனாதிபதி பெற்றுக்கொண்டார். இவை இரண்டுமே அரசமைப்பை மீறும் செயல்பாடாகும்” என்றார்.