கோத்தாபயவின் தலைமைத்துவத்தின் கீழ் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்த வாய்ப்பு – இந்திய பிரதமர் மோடி வாழ்த்து

 ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருடத்தை பூர்த்தி செய்த இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வருட காலப்பகுதியில் இலங்கை இந்தியா இடையிலான உறவானது பல புதிய மார்க்கங்களில் மேலும் விஸ்தரிக்கப்பட்டதுடன் அந்த உறவானது வலுவான நிலைக்கு சென்றுள்ளதாகவும் பிரதமர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

கொவிட்-19 சவால்கள் நிறைந்த காலப்பகுதிக்கு மத்தியில் இருநாடுகளுக்கும் இடையில் காணப்படும் வலுவான ஒத்துழைப்பானது இருநாட்டு மக்களினதும் நட்புறவை பிரதிபலிப்பதாகவும் இந்திய பிரதமர் மோடி சுட்டிக்காட்டியுள்ளார். கொவிட்19 பெருநோய்க்கு எதிரான இலங்கையின் நடவடிக்கைகளில் தொடர்ந்தும் ஆதரவினை வழங்கி செயற்படுவதில் உறுதியாகவுள்ள அதேநேரம் இலங்கையின் அபிவிருத்தி தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் நிறைவு செய்வதற்கும் இந்தியா திடசங்கற்பம் பூண்டுள்ளதனை பிரதமர் மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளார்.

அதேபோல ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ அவர்களின் தலைமைத்துவத்தின்கீழ் இருதரப்பு உறவினை முழு அளவில் பேணுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பதவிக்காலத்தில் ஜனாதிபதியின் வெற்றிக்காக வாழ்த்துக்களை தெரிவித்துள்ள பிரதமர் மோடி, எதிர்காலத்திலும் மிகவும் நெருக்கமான ஒத்துழைப்பினை பேணுவதற்கு இந்தியா தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய-இலங்கை தலைவர்கள் மட்டத்திலான கிரமமான தொடர்பாடலின் பெறுபேறாக கொவிட்-19 சவால்களுக்கு மத்தியில் அபிவிருத்தி ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகள், மக்கள் இடையிலான தொடர்புகள் உள்ளிட்ட துறைகளில் ஏற்பட்டிருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த அபிவிருத்திகள் ஆகியவற்றின் தொடர்ச்சியாக இந்தப் பாராட்டுக்கடிதம் அமைந்துள்ளது.