பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பிற்கான ஜனாதிபதி செயலணி கூடியது

வீண் விரயம் மற்றும் ஊழலை தடுத்து உயர் செயற்திறன் மிகு கொள்முதல் செயற்பாடு அவசியம் என பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கை கணக்காய்வாளர் சேவை சங்கத்திற்கும் பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணிக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (22) அலரி மாளிகையில் நடைபெற்றது.

நாட்டைக் கட்டியெழுப்பி நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்காக பொருளாதார மறுமலர்ச்சி மற்றும் வறுமை ஒழிப்பு தொடர்பான ஜனாதிபதி செயலணி முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இலங்கை கணக்காய்வாளர் சேவை சங்கத்திற்கு இதன்போது பசில் ராஜபக்ஸ அழைப்பு விடுத்துள்ளார்.

நிறுவனங்களின் தலைவர்கள் மாறினாலும் திட்டங்கள் மாறாமல் நிலையாக கொண்டு செல்லும் முறைமையின் அவசியம் தொடர்பில் இதன்போது பசில் ராஜபக்ஸ சுட்டிக்காட்டியுள்ளார்.

கணக்காய்வாளர் சேவை துறையில் காணப்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் இதன்போது நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.