தடையை மீறி நினைவேந்தல் நடத்தினால் உடன் கைது – பொலிஸ் பேச்சாளர் கடும் எச்சரிக்கை

“விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நினைவேந்தலுக்கு எதிரான தடையுத்தரவுகளை பொலிஸார் நீதிமன்றங்களில் பெற்றுள்ளார்கள். இந்தத் தடையுத்தரவுகளை மீறி நினைவேந்தல்களை நடத்துவோர் உடனடியாகக் கைது செய்யப்படுவார்கள்” என எச்சரிக்கை விடுத்துள்ளார் பொலிஸ் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண.

வடக்கில் உள்ள 6 நீதிமன்றங்களில் பொலிஸார் நேற்று மாவீரர் தின நினைவேந்தலுக்கு எதிராக வழக்குகளைத் தாக்கல் செய்தனர். இதனையடுத்து மன்னார், வவுனியா நீதிமன்றங்கள் மாவீரர் தின நினைவேந்தலுக்குத் தடையுத்தரவுகளை வழங்கியுள்ளன.

யாழ்ப்பாணம், பருத்தித்துறை, சாவகச்சேரி, மல்லாகம் நீதிமன்றன்களிலும் பொலிஸாரால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இது குறித்து பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண கருத்து வெளியிடுகையில்-

“மன்னாரிலும் வவுனியாவிலும் மாவீரர் தினத்தைத் தடை செய்யும் உத்தரவை நீதிமன்றங்கள் வழங்கியுள்ளன. மன்னாரில் ஐந்து பேருக்கு எதிராகவும் வவுனியாவில் எட்டு பேருக்கு எதிராகவும் தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. மாவீரர் தினத்துக்கான நடவடிக்கைகளில் குறிப்பிட்ட நபர்கள் ஈடுபட்டிருந்ததை தொடர்ந்தே இந்த உத்தரவை பெற்றோம். இந்த தடை உத்தரவை மீறுபவர்களுக்கு எதிராக பொலிஸார் கடும் நடவடிக்கை எடுப்பார்கள். இவ்வாறான நிகழ்வுகள் தமிழ், சிங்கள மக்களிற்கு எதிரான பிரிவினையை அதிகரிக்கும்” என்றார்.