கொரோனா பாதித்த எம்.பி.யைச் சந்தித்தார் – பிரித்தானிய பிரதமர் மீண்டும் தனிமைப்படுத்தப்பட்டார்

கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட எம்.பி.ஒருவரை சந்தித்து பேசியமையை அடுத்து இங்கிலாந்து பிரதமர் பொரிஸ் ஜோன்சன் மீண்டும் சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

அஷ்பீல்ட் தொகுதியின் எம்.பியான லீ அண்டர்சன் உள்ளிட்ட குழுவினரை பிரதமர் ஜோன்சன் கடந்த வியாழக்கிழமை சுமார் 35 நிமிடங்கள் பேசியிருந்தார். இதன் பின்னரே, அண்டர்சனுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்தே பிரதமரை தனிமையில் இருக்குமாறு பொது சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கொரோனா தொற்றுப் பரவலின் முதல் அலையில் தொற்றுக்கு இலக்கான பொரிஸ் ஜோன்சன், தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டு, மீண்டுவந்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ஜோன்சன் நலமாக உள்ளார். அவருக்கு எந்த அறிகுறிகளும் இல்லை என அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.