20 ஆவது திருத்தத்தை ஆதரித்த ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்களுக்கு பிரத்தியேக ஆசனங்கள்

20 ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு வழங்கிய ஐக்கிய மக்கள் சக்தியின் 8 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்க்கட்சி வரிசையில் பிரத்தியேக ஆசனங்கள் ஒதுக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆளும் கட்சி வரிசையில் ஆசன ஒதுக்கீடு மேற்கொள்ளப் போதிய இடம் இல்லாமையே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20ஆவது திருத்தச் சட்டத்துக்கு ஐக்கிய மக்கள் சக்தியை பிரதி நிதித்துவப்படுத்தும் 8 பாராளு மன்ற உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்தனர்.

இதனையடுத்து ஒன்று கூடிய ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழு, அவர்களை ஆளும் கட்சித் தரப்பினராக கருதத் தீர்மானித்திருந்தது. இதன்படி பாராளுமன்றத்தில் அவர்களுக்கான ஆசனங்களை ஆளும் கட்சி வரிசையில் ஒதுக்குமாறு அந்தக் கட்சி சபாநாயகரிடம் எழுத்துமூலம் கோரியிருந்தது.

எவ்வாறாயினும் ஆளும் கட்சிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்கள் உள்ளதுடன் அதில் 30 இற்கும் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துள்ளனர். இந்தநிலையில் கட்டளைச் சட்டத்தின்படி பாராளுமன்றில் ஆசனங்களை ஒதுக்குவது தொடர்பான முழுமையான அதிகாரம் சபாநாயகரிடமே உள்ளது.

சுபாநாயகரால் மேற்கொள்ளப்படும் தீர்மானம் பாராளுமன்ற பொதுச் செயலாளரினால் படைக்கல சேவிதருக்கு அறிவிக்கப்படும். இதனையடுத்தே ஆசன ஒதுக்கீடு மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.