நல்லுரில் ஒருவருக்கு கொரோனா – 14 நாள் தனிமைப்படுத்தலின் பின்னர் பரிசோதனையில் உறுதியான தொற்று

யாழ்ப்பாணத்தில், நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக இன்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் டாக்டர் த.சத்தியமூர்த்தி அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;

“யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 157 பேருக்கு நேற்று Covid-19 பரிசோதனை செய்யப்பட்டது. இதில் நல்லூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேற்படி நபர் கடந்த 26 ஆம் திகதி பேலியகொடை மீன் சந்தைக்கு சென்றதன் காரணமாக 28ஆம் திகதி மட்டக்களப்பு தனிமைப்படுத்தல் நிலையத்துக்கு அனுப்பப்பட்டடவர். அங்கே செய்யப்பட்ட பரிசோதனையில் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டிருந்தது.

கடந்த 31ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வீட்டிற்கு வந்தவர். இந்நிலையில் கடந்த 14 நாட்களாக வீட்டில் தனிமையில் இருந்தவர் இன்று பரிசோதனையில் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டதன் காரணமாக மேலதிக சிகிச்சைக்காக மருதங்கேணி Covid-19 சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இன்றைய பரிசோதனையில வடக்கு மாகாணத்தில் ஏனையவர்களுக்கு Covid-19 தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.”