மேல் மாகாணத்தைவிட்டு மக்கள் வெளியேறுவதற்குத் தடை – ஜனாதிபதியின் உத்தரவையடுத்து நடவடிக்கை

கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் பெருமளவில் கண்டறியப்பட்டுவரும் மேல் மாகாணத்தை விட்டு மக்கள் வெளியேறுவதைத் தடுக்க உடன் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், உடன் அமுலுக்கு வரும் வகையில் எதிர்வரும் 15ஆம் திகதி வரை மேல் மாகாணத்திலிருந்து எந்தவொரு நபரும் வெளியேற முடியாது என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம் பெற்ற கொரோனா தடுப்பு செயலணி உறுப்பினர்களுடனான கலந்துரையாடலின்போது ஜனாதிபதி இவ்வாறு பணித்திருந்தார்.

மேலும், கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க பயணக் கட்டுப்பாடுகள் அவசியம் எனவும் தற்போது முடக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்குள் நுழையவோ அல்லது வெளியேறவோ எந்தவொரு நபரையும் அனுமதிக்கவேண்டாம் என ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

அத்துடன், தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை வழங்கப் பொறிமுறையை உருவாக்க அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார். இதேவேளை, கொரோனா நோயாளிகளையும் தொற்றுநோயற்ற நோய்களிலிருந்து பாதுகாக்க விசேட கவனம் செலுத்தப்படவேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.