கொரோனா தொற்றினால் நேற்று நால்வர் உயிரிழப்பு – மரணமானோர் தொகை 46 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நால்வர் நேற்று உயிரிழந்தனர் எனச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். இதன் மூலம் இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரழந்தவர்களின் எண்ணிக்கை 46 ஆக உயர்வடைந்தது.

உயிரிழந்தவர்களில் ஒருவர் கொழும்பு 11 பகுதியைச் சேர்ந்த 40 வயதுடையவர் எனத்தெரிவிக்கப்படுகின்றது. இந்த நபர் உயிரிழந்த நிலையில் கொழும்பு தேசிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

அத்துடன் களனி பகுதியை சேர்ந்த 45 வயது நபர் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நபர் கொரோனா தொற்றுக்குள்ளாகி அம்பாந்தோட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.

இதேவேளை, பாணந்துறை பகுதியைச் சேர்ந்த 55 வயது நபர் ஒருவர் கொரோனா தொற்றால் நேற்றுக் காலை உயிரிழந்தார். கொழும்பு 10, மாளிகாவத்தை பிரதேசத்தை சேர்ந்த 68 வயது பெண் உயிரிழந்தார். இந்தப் பெண் அவரது வீட்டிலேயே உயிரிழந்த நிலையில், பிரேத பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. கொரோனா தொற்றால் ஏற்பட்டஉயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 45 ஆக உயர்வடைந்தது.