கொரோனாவினால் மரணமானோர் தொகையை அரசு மறைக்கின்றது – ஹரின் பெர்ணாண்டோ குற்றச்சாட்டு

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றினால் ஏற்பட்ட உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை அரசு மறைக்கின்றது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ குற்றம் சாட்டியுள்ளார்.

நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு;

“நாட்டின் எதிர்க்கட்சி என்ற வகையில், இந்த தொற்றுநோய் சூழ்நிலையில், மக்கள் முகங்கொடுத்த பிரச்னைகள் தொடர்பாக தெரிவிப்பதற்கு, ஓர் அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.

அந்தவகையில் நேற்று முன்தினம் இரவு மாத்திரம், ராஜகிரிய, கம்பஹா, குருநாகல் ஆகிய பகுதிகளில், 4 மரணங்கள் பதிவாகியிருந்தன. இவ்வாறு உயிரிழந்தவர்களின் மரணச் சான்றிதழ் ஐக்கிய மக்கள் சக்தியிடம் உண்டு.

அந்த இறப்புக்கு, கொரோனா வைரஸ்தான் காரணம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, நாட்டை கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து காப்பதற்கான முயற்சியை, அரசு கைவிட்டுள்ளது என்பது உறுதியாகியுள்ளது. மேலும், அரசின் கவனமின்மை நாட்டை பேரழிவுக்குள் இட்டுச் செல்லும்” என்றார்.