கொரோனா உயிரிழப்பு 41ஆகியது! நேற்று மட்டும் நால்வர் மரணம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது எனச் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்தார்.

கொரோனா தொற்று உறுதியான நிலையில் மேலும் ஐந்து பேர் உயிரிழந்த நிலையில் இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மரணங்கள் தொடர்பான விவரங்களை அரச தகவல் திணைக்களம் நேற்று மாலை அறிவித்தது.

இதன்படி 51 வயதுடைய இராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த ஆண் ஒருவர் உயிரிழந்தார். அவர் முதியோர் இல்லத்தில் தங்கியிருந்தவராவார். கடந்த 7ஆம் திகதி அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார். கொரோனாத் தொற்றால் ஏற்பட்ட நியுமோனியா காய்ச்சல் காரணமாக அவர் உயிரிழந்தார்.

கொழும்பு – 10 ஐ சேர்ந்த ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளார். அவர் கடந்த 23ஆம் திகதி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்துள்ளார். கொரோனா தொற்றினால் சுவாச கட்டமைப்பில் ஏற்பட்ட பாதிப்பால் அவர் உயிரிழந்துள்ளார்.

கம்பஹா, உடுகம்பல பிரதேசத்தில் 63 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். அவர் கம்பஹா மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலையில் நேற்று சேர்க்கப்பட்ட நிலையில் மரணாமானார். இதேபான்று, 55 – 60 வயதுக்குட்பட்ட அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரும் உயிரிழந்தார். அவரது உடல் கடந்த 8ஆம் திகதி பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்ட நிலையில் அவருக்குக் கொரோனா தொற்றியமை உறுதியாகியுள்ளது.

ராகமயைச்சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவர்கொவிட் -19 நோய் காரணமாக உயிரிழந்தார். இதன்படி இலங்கையில் இதுவரை 41 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்தனர்.