கொரோனா தடுப்பூசி: அனைவருக்கும் கிடைக்குமா?

உலக நாடுகளை கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. ஒரு வருடத்துக்கு முன்னதாக சீனாவிலிருந்து உலக நாடுகளுக்குப் பரவத் தொடங்கிய இந்த வைரஸ் தற்போது ஒட்டுமொத்த உலகத்தையும் புரட்டிப்போட்டிருக்கிறது.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிப்பதற்காக, அமெரிக்கா, சீனா, ஜெர்மனி, இங்கிலாந்து, இந்தியா, ஆகிய நாடுகள் தீவிர முயற்சியில் இறங்கியுள்ளன. இந்நிலையில் அமெரிக்கா மற்றும் ஜெர்மனி மருந்து நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள BNT162b2 மருந்து 90 சதவிகிதம் வெற்றி அடைந்துள்ளது.

அமெரிக்காவின் பிஃப்ஸர், ஜெர்மனியின் பயோஎன்டெக் இணைந்து தயாரிக்கும் கொரோனா தடுப்பு மருந்து, நோயாளிகளின் உடலில் 90 சதவிகிதம் சிறப்பாகச் செயல்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மொத்தம் 6 நாடுகளில் 43,500 பேரிடம் இந்த மருந்து பரிசோதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, பிரேசில், அர்ஜென்டினா, தென் ஆப்ரிக்கா மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் நடத்தப்பட்ட சோதனைகளில் 2ஆம் முறை இந்த மருந்தை எடுத்துக் கொண்ட பிறகு 90 சதவிகிதம் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு கிடைத்ததுள்ளதாக பிஃப்ஸர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வைரசுக்கு எதிராக போராடும் ஆண்டிபாடிகள் மற்றும் நோய் எதிர்ப்பின் ஒரு அமைப்பான T செல்களை உருவாக்க இந்த தடுப்பு மருந்து உடலை பழக்கப்படுத்தும் என்று அந்நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 100 மில்லியன் டோஸ் வரை தடுப்பூசியை உற்பத்தி செய்வதாகவும், 2021 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 1.2 பில்லியனுக்கும் அதிகமான டோஸை உற்பத்தி செய்வதாகவும் பிஃப்ஸர் கூறியுள்ளது.

இம்மருந்து 90 சதவிகிதம் வெற்றியைக் கொடுத்தாலும், பொதுமக்கள் பயன்பாட்டிற்குக் குறிப்பாக இந்தியாவில் உள்ள மக்கள் பயன்பாட்டிற்கு வருவதற்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இந்த மருந்தை வாங்குவதற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான் ஆகிய நாடுகள் ஒப்பந்தம் போட்டுள்ளன.

இதில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்க மக்களுக்கு கொரோனா மருந்து இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். அதோடு, இங்கிலாந்து அரசும் 4 கோடி டோஸ்கள் இந்நிறுவனத்திடம் இருந்து வரவழைக்கத் திட்டமிட்டுள்ளது. இதில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன் 1 கோடி டோஸ்கள் வேண்டுமெனக் கேட்டுள்ளது.

இவ்வாறு ஒப்பந்தம் செய்யப்பட்ட நாடுகளுக்கு முதலில் வழங்கப்பட வேண்டும் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இம்மருந்தைச் சேமித்து வைத்துப் பயன்படுத்துவதிலும் சிக்கல் உள்ளது.

ஏனென்றால் இம்மருந்தை மைனஸ் 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்குக் கீழே வைத்துத்தான் பயன்படுத்த முடியும் என்று அதன் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். எனவே இதனை அமெரிக்காவில் செயல்பட்டு வரும் நவீன மருத்துவமனைகளிலேயே இந்த அளவுக்கு குறைவான குளிர் சேமிப்பு வசதிகள் இல்லை என்பதால் ஏழை நாடுகளில் குறிப்பாகக் கிராமப்புறங்களில் உள்ள மக்களுக்கு இதன் பயன் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.