“புதிய வழமை” கோட்பாட்டுக்கு அமைய நாட்டின் செயல்பாடுகள் ஆரம்பம்

மேல் மாகாணம் உட்பட பல பகுதிகளில் கடந்த 10 நாள்களாக, அமுலிலிருந்த தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நேற்று அதிகாலை 5 மணிக்குத் தளர்த்தப்பட்டதையடுத்து கொரோனா தொற்றுப் பரவலுக்கு மத்தியில் “புதிய வழமை” என்ற கோட்பாட்டுக்கு அமைய நாட்டின் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்லும் நடைமுறை ஆரம்பமாகியுள்ளது என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

“நிறுவனங்கள், தொழில்சாலைகள் போன்றவற்றை முன்னெடுத்துச் செல்வதில் கூடுதல் கவனம் தேவை. இதற்குரிய நிபந்தனைகளை சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நிபந்தனைகள் மற்றும் அறிவுறுத்தல்களை அனுசரித்துச் செயல்படுவது பற்றி கவனம் செலுத்துமாறும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், காலி ஆகிய மாவட்டங்களிலுள்ள 27 பொலிஸ் பிரிவுகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் பிரதேசங்கள் என்று பிரகடனப் படுத்தப்பட்டுள்ளன என கொரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையம் அறிவித்துள்ளது.