ஐபிஎல் 2020: 2ஆவது தகுதிச்சுற்றில் ஐதராபாத் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது டெல்லி அணி

நடப்பாண்டிற்கான ஐபிஎல் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் நேற்றைய தினம் நடைபெற்ற 2ஆவது தகுதிச்சுற்றில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் (Sunrisers Hyderabad) அணியை 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, டெல்லி கெபிடல்ஸ் (Delhi Capitals) அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற டெல்லி அணி முதலில் துடுப்பாட்டத்தைத் தெரிவு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய டெல்லி அணியில் தொடக்க வீரர்கள் அதிரடியாக ஆடி ஓட்டங்களைக் குவித்தனர். அதிகபட்சமாக தவான் 78ஓட்டங்களையும் , ஹெட்மெயர் 42 ஓட்டங்களையும் சேர்க்க, டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 189 ஓட்டங்களைக் குவித்தது.

இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தது. அதிகபட்சமாக வில்லியம்சன் 67 ஓட்டங்களைச் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை மாத்திரமே எடுத்து தோல்வியுற்றது.

இவ் வெற்றியின் மூலம் டுபாயில் நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில், டெல்லி அணி மும்பையை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.