கிளிநொச்சியின் இரண்டு பகுதிகள் முடக்கல் – தொற்றாளர் ஒருவர் நடமாடியதையடுத்து நவடிக்கை

கிளிநொச்சி மாவட்டத்தின் ஜெயபுரம் வடக்கு, தெற்கு பிரதேசங்கள் முற்றாக முடக்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை பூநகரி பிரதேச செயலாளர் கிருஷ்ணேந்திரன் உறுதிப்படுத்தினார்.

நேற்றுமுன்தினம் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளி தனிமைப்படுத்தலை மீறி சுற்றித் திரிந்தமை அம்பலமானமையை அடுத்தே இந்தப் பகுதிகள் நேற்று முடக்கப்பட்டுள்ளன.

கொழும்பில் பணியாற்றும் ஜெயபுரத்தை சேர்ந்த குறித்த நபர் கடந்த 25 ஆம் திகதி சொந்த இடத்திற்கு திரும்பியிருந்தார். அவரை சுயதனிமைப்படுத்துமாறு பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் அறிவுறுத்தியிருந்தனர்.

அத்துடன், அவருக்கு பி.சி.ஆர். பரிசோதனையும் நடத்தப்பட்டது. ஆய்வில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. ஆனால், அவரிடம் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் நடத்திய ஆய்வில் தனிமைப்படுத்தல் கட்டுப்பாடுகளை மீறி அவர் ஜெயபுரத்தின் வடக்கு, தெற்கு பிரதேசங்களில் நடமாடியமை தெரிய வந்தது. இதையடுத்தே அந்தப் பிரதேசங்கள் முடக்கப்பட்டுள்ளன.