இலங்கையில் நேற்றும் நான்கு பேர் கொரோனாவுக்குப் பலி – மரணமானோர் தொகை 34 ஆக அதிகரிப்பு

இலங்கையில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றால் நேற்று நால்வர் மரணமடைந்தனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளாகி மேலும் நால்வர் இலங்கையில் உயிரிழந்தனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவ நிபுணர் அசேல குணவர்த்தன உறுதிப்படுத்தினார்.

கொழும்பு 10 மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 42 வயது பெண்ணொருவர் அவரது வீட்டிலேயே உயிரிழந்தார். இவர் நீண்ட நாள் இருதய நோயால் பீடிக்கப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இருதய நோயுடன் கொரோனா தொற்று ஏற்பட்டதால் இவரது மரணம் சம்பவித்துள்ளது.

அதேபோன்று கொழும்பு 10 மாளிகாவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 69 வயது பெண்ணொருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இவர் நீண்ட கால நோய்களால் பீடிக்கப்பட்டிருந்தார். நோய் நிலைமை தீவிரமடைந்ததால் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் உயிரிழந்தார். இவரின் மரணத்துக்குக் காரணம் கொரோனா தொற்றுடன் நிமோனியா ஏற்பட்டதாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயது முதியவர் ஒருவரும் கொரோனாவால் உயிரிழந்தார். இவர் நீண்ட நாள் நோய் நிலைமையால் பீடிக்கப்பட்டிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவர் கடந்த சில தினங்களாக சுகவீனமுற்றிருந்த நிலையில் வீட்டிலேயே உயிரிழந்தார். கொரோனா வைரஸ் தொற்றுடன் நிமோனியா நிலை உருவானதால் இவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கனேமுல்லை பிரதேசத்தைச் சேர்ந்த 88 வயது வயோதிபப் பெண்ணும் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இவர் மினுவாங்கொடை தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர் எனத்தெரிவிக்கப்படுகின்றது. தனிமைப்படுத்தப்பட்ட இவர் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட பின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நோய்நிலை தீவிரமடைந்ததால் கொழும்பு ஐ.டி.எச். மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்படுகின்றது. இவரது மரணத்துக்கான காரணம் கொரோனா தொற்று, நிமோனியாவுடன் இரத்தம் விஷமடைந்ததாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.