வெற்றியின் தறுவாயில் பைடன்: நீதிமன்றத்தை நாடினார் ட்ரம்ப்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றியின் தறுவாயில் இருக்கிறார். ஆனால், அவரின் வெற்றியை ஏற்காத குடியரசுக் கட்சியின் வேட்பாளரும் ஜனாதிபதியுமான டொனல்ட் ட்ரம்ப் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

ஜனாதிபதி ட்ரம்ப், ‘இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் ஜனநாயகத்தைத் திருடிவிட்டனர்”, என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த 3ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடந்தது. இதில் ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் ஜனாதிபதி ட்ரம்பும் போட்டியிட்டனர்.

மொத்தம் உள்ள 50 மாகாணங்களில் பெரும்பாலானவற்றில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி தேர்தல் முடிவுகளை அறிவித்துவிட்டன. மக்கள் சபைக்குத் தெரிவாகும் 538 பிரதிநிதிகளில் 270 பிரதிநிதிகளின் ஆதரவைப் பெறும் வேட்பாளரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

அந்த வகையில் ஜோ பைடன் இதுவரை வெற்றிக்கு அருகே 264 பிரதிநிதிகளின் ஆதரவு வாக்குகளைப் பெற்றுள்ளார். அவரின் வெற்றிக்கு இன்னமும் 7 ஆதரவு வாக்குகள் தேவை.

ஜனாதிபதி ட்ரம்ப் 214 பிரதி நிதிகளின் ஆதரவையே பெற்றுள்ளார். இழுபறிநிலையில் காணப்படும் அரிசோனா, மிக்சிகன், விஸ்கான்ஸின், நியூஹமிஸ் பெயர், மாகாணங்களில் ஜோ பைடன் முன்னிலையில் உள்ளார். புளோரிடா, ஐயோவா, ஒஹியோ, டெக்சாஸ் மாகாணங்களில் ட்ரம்ப் முன்னிலை வகிக்கிறார்.

ஆனால், ஜோ பைடனின் தேர்தல் வெற்றியை ஏற்காத அதிபர் ட்ரம்ப் பல்வேறு மாகாணங்களில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். குறிப்பாக பென்சில்வேனியா, மிக்சிகன், ஜோர்ஜியா, நிவேடாஆகிய மாகாணங்களில் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்பது அவரின் நிலைப்பாடு.

ஜனாதிபதி ட்ரம்பின் இந்தக்குற்றச்சாட்டுக்கள் பொய்யானவை, ஆதரமற்றவை என்று நியூயோர்க் ரைம்ஸ் நாளிதழ்மற்றும் செய்தி தொலைக் காட்சிகளான ஏ.பி.சி., சி.பி. எஸ்., என்.பி.சி. ஆகியவை தெரிவித்துள்ளன.