சர்வ கட்சி மாநாட்டை உடனடியகக் கூட்டுங்கள் – ஜனாதிபதியை வலியுறுத்தும் ஐக்கிய மக்கள் சக்தி

“சர்வக்கட்சி மாநாட்டை உடனடியாக கூட்டுவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார கோரிக்கை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு;

“கொரோனா வைரஸ் தாக்கத்தால் தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் எதிர்க்கட்சிக்குரிய பணிகளை ஐக்கிய மக்கள் சக்தி பொறுப்புடன் செய்துவருகின்றது. பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் தேச நலன் மற்றும் மக்களின் நலனை முன்னிறுத்தி நாம் செயற்பட்டுவருகின்றோம்.

எனினும், கொரோனா முதலாம் அலை ஏற்பட்டபோதும் அரசியல் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதே அரசின் இலக்காக இருந்தது. அன்று மூன்றிலிரண்டு பெரும்பான்மை என்ற கருத்து விதைக்கப்பட்டது, 2ஆம் அலை ஏற்பட்டபோது 20ஆவது திருத்தச்சட்டத்தை தூக்கிபிடித்தனர். மாறாக வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

அதேவேளை, கொரோனா 2 ஆம் அலை சவால்களை எதிர்கொள்ள வேண்டும், பரவலை தடுக்கவேண்டும். இவற்றுக்கான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு நாம் தயார். இவை தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வக்கட்கி குழு கூட்டத்தை கூட்டுமாறு பிரதான எதிர்க்கட்சியின் பொதுச்செயலாளர் என்ற வகையில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றேன்” என்றார்.