டென்மார்க் நீதி அமைச்சருக்குத் தொற்றியது கொரோனா – பிரதமர், அமைச்சர்கள் சுயதனிமையில்

டென்மார்க்கின் நீதி அமைச்சருக்கு வைரஸ் தொற்றியதை அடுத்து நாட்டின் பிரதமர் உட்பட அவரது அமைச்சரவையில் பெரும் பங்கினர் சுயதனிமைப்படுத்தலில் உள்ளனர்.

பிரதமர் உட்பட அமைச்சர்களுடன் நடத்திய சந்திப்பு ஒன்றின் பின்னரே நீதி அமைச்சருக்கு வைரஸ் தொற்றியமை கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு நோய் அறிகுறிகள் வெளிப்பட்டுள்ளன. இதனால் முன்னெச்சரிக்கையாக பிரதமரும் ஏனைய அமைச்சர்களும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.

43 வயதான பிரதமர் மெற் பிரெட்றிக்சன் (Mette Frederiksen) அம்மையாருக்கு இதுவரை தொற்று அறிகுறிகள் ஏதும் இல்லை என்பதை அரசு உறுதிப்படுத்தி உள்ளது.

அவர் தொடர்ந்து பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படவுள்ளார்.அவர் தனது இல்லத்தில் தங்கியிருந்தவாறு அரசுக்கடமைகளைக் கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான அமைச்சர்களும் பிரதமர்களும் தத்தமது கடமைகளில் இல்லாதநிலையில் நாட்டு நிர்வாகம் எவ்வாறு இயங்கப்போகின்றது என்ற கேள்வி அங்கு எழுந்துள்ளது.

20 பேர் கொண்ட அமைச்சரவையில் 13 பேர் தனிமைப்பட்டுள்ளனர். மிகுதி ஏழு பேருடன் அரச நிர்வாகத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்பது பற்றி பரிசீலிக்கப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

கொரோனா வைரஸின் முதல் கட்டத்தில் மிக குறைந்த பாதிப்புகளைச் சந்தித்த ஸ்கன்டிநேவியன் நாடு டென்மார்க். அங்கு இதுவரை 728 வைரஸ் உயிரிழப்புகளே பதிவாகி உள்ளன. எனினும் தற்சமயம் இரண்டாவது அலையில் அங்கு தொற்றுக்கள் வேகமாக அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.