கொரோனா தீவிரமடைந்தமைக்கு அரசாங்கத்தின் பொறுப்பற்ற போக்கே காரணம்; சஜித் குற்றச்சாட்டு

20 ஐ நிறைவேற்றிக் கொள்ளும் முனைப்பில் மட்டுமே அரசாங்கம் செயற்பட்டதன் விளைவாகவே, இன்று நாட்டில் கொரோனா தொற்று வீரியமடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாகக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். சஜித் பிரேமதாஸ மேலும் கூறியுள்ளவை வருமாறு:-

“கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று 10 ஆயிரத்தைக் கடந்து 20 மரணங்களும் பதிவாகியுள்ளன. கொரோனாவின் இரண்டாவது அலை ஏற்படமுன்னர், அதாவது ஒக்ரோபர் மாதமளவில் 3 ஆயிரம் பேரே கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால், நான்கே வாரங்களில் 7 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இப்போதும் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, இதனை சமூகத்தொற்று இல்லை என்றா கூறப்போகிறார்?

நாடாளுமன்றில் வைத்து நாம் சுகாதார வழிமுறைகள் தொடர்பாகக் கேள்வி எழுப்பிய போது, அமைச்சர் பவித்ராவோ நாடாளுமன்றம் என்பது பொதுவான இடம் இல்லை என்று பதிலளித்தார். தற்போது நாடாளுமன்றில் கடமையாற்றும் பொலிஸார் ஒருவருக்குக் கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால், இரண்டு நாள்கள் நாடாளுமன்றை மூடி தொற்று நீக்கமும் செய்தார்கள்.

20 ஐ நிறைவேற்றிக் கொள்ளும் ஆசையாலேயே அரசாங்கம் கொரோனா விடயத்தை கடந்த காலங்களில் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அடுத்த வாரமளவில் ஒரு நாளைக்கு நாடாளுமன்ற அமர்வை நடத்தத் தீர்மானித்துள்ள அரசாங்கம், 20 ஐ நிறைவேற்ற மட்டும் கடந்த காலங்களில் தொடர்ந்தும் நாடாளுமன்றைக்கூட்டியது.

இதனால்தான் தற்போது நாட்டில் இந்த பரவல் வேகமெடுத்துள்ளது. கொரோனா விடயத்தில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது. கொரோனாவை விட, தனது அரசியல் அதிகாரத்தைப் பலப்படுத்தவே அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது என்பது இதன் ஊடாக நன்றாக தெரியவந்துள்ளது.

தற்போது 20 ஆயிரம் பி.சி.ஆர். பரிசோதனைகளின் முடிவுகள் இன்னமும் வெளிவரவில்லை. வத்தளையில் 1000 பேர் வேலை செய்யும் தொழிற்சாலையின் ஊடாக இன்னொரு அலை ஏற்படும் அச்சம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆபத்தான நிலையில், அரசாங்கம் எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போகிறது?

அரசாங்கம் எமது கருத்துக்களை செவிசாய்க்கவில்லை. நாம் நாடாளுமன்றில் கருத்துக்களை வெளியிடும்போது கூட அரசாங்கத் தரப்பினர் கூச்சலிட்டார்கள். எனினும், நாம் அன்று கூறிய விடயங்கள் இன்று உண்மையாகியுள்ளன. இதனை மக்களும் இன்று உணர்ந்துள்ளார்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.