தற்போது பரவும் வைரஸ் உடலுக்குள் வேகமாக ஊடுருவி பரவக்கூடியது! – ஆய்வில் வெளியாகும் அதிர்ச்சித் தகவல்

இலங்கையில் தற்போது பரவிவரும் வைரஸின் அளவு மிகவும் வேகமாக உடலுக்குள் ஊடுருவி பாரியளவில் வளர்ச்சி அடைவதுடன் மிகவும் வேகமாகப் பரவக்கூடிய தன்மையுடையது என அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

புதிய வைரஸின் திரிபுத்தன்மை தொடர்பில் ஆய்வு அறிக்கை சுகாதார அமைச்சுக்கு கிடைத்துள்ளது என்றும் அவர் கூறினார். வைரஸ் தொடர்பில் கிடைத்த ஆய்வு அறிக்கை குறித்து விசேடஅறிக்கை ஒன்றை நேற்று அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

இதன் மூலம் இந்த வைரஸ் துரிதமாகப் பரவக்கூடியது என்பது தெரியவந்துள்ளது.

இதற்கமைய இம்முறை கொரோனா வைரஸின் தன்மை தொடர்பில் கூடிய கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார். ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக பேராசிரியர் நீலிகா மளவி உள்ளிட்ட குழுவினர் இந்த வைரஸ் தொடர்பில் விரிவான ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளனர் என்று அமைச்சர் குறிப்பிட்டார்.

ஆய்வு அறிக்கை ஒன்று சுகாதார அமைச்சுக்கு கிடைத்துள்ளது. இந்த அறிக்கைக்கு அமைய இந்தக் காலப்பகுதியில் இலங்கையில் தற்பொழுது ஒருவகை வைரஸ் மாத்திரமே உள்ளது. இது மினுவாங்கொடை, பேருவளை,பேலியகொடை மீன் சந்தை உள்ளிட்ட இலங்கையில் பல இடங்களில் உண்டு.

இந்த ஆய்வின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் பேராசிரியர் தலைமையிலான குழுவினர் இந்த வைரஸின் அளவு மிகவும் வேகமாக உடலுக்குள் ஊடுருவி பாரியளவில் வளர்ச்சி அடைவதுடன் மிகவும் வேகமாகப் பரவக்கூடிய தன்மையுடைய வைரஸ் என்றும் அவர்கள் குறிப்பிட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

இலங்கையில் முன்னர் இருந்த கொரோனா வைரஸ் வகையிலும் பார்க்க இந்த வைரஸ் மாறுபட்டது. இந்த வைரஸ் பி.142 பிரிவிற்கான துணைக் குழுவில் அடங்கும் சார்ஸ் வைரஸுடன் தொடர்புபட்டதாகும் என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.

எமது நாட்டு மக்களிடன் கேட்டுக் கொள்வது அரசு என்ற ரீதியில் இந்த நோயை இலங்கையில் இல்லாதொழிக்க மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளோம். பொது மக்கள் உரிய சுகாதார பழக்கவழக்கங்களைக் கடைப்பிடித்து தங்களது ஒத்துழைப்பை இந்த வேலைத்திட்டத்துக்கு வழங்கக் கேட்டுக்கொள்கின்றோம்” என்றார்.