ஐபிஎல்: 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி!

கொல்கத்தாவுக்கு எதிரான ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

துபாயில் நடைபெற்று வரும் 13ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய (அக்டோபர் 29) 49ஆவது ஆட்டத்தில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், இயன் மார்கன் தலைமையினான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டம் துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் டோனி பந்துவீச்சைத் தேர்வு செய்தார். சென்னை அணியில் நேற்று டு ப்ளிசிஸ், இம்ரான் தாஹிருக்குப் பதிலாக சேன் வாட்சன், லுங்கி இங்கிடி சேர்க்கப்பட்டனர். ப்ளே ஆஃப் வாய்ப்பை சென்னை அணி ஏற்கனவே இழந்துள்ள நிலையில் புள்ளிப்பட்டியலில் அதிக மதிப்பெண்ணை பெறும் முனைப்புடன் கொல்கத்தா அணியுடன் நேற்று களம் இறங்கியது. 20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் குவித்தது.

இதைத் தொடர்ந்து சென்னை அணி 173 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடியது. 20 ஓவர் முடிவில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 178 ரன்களைக் குவித்தது. கடைசி பந்தில் இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றி பெற்றது.