வடமராட்சி கரவெட்டியிலுள்ள கிராமம் ஒன்று முடக்கப்பட்டது! இராணுவம், பொலிஸ் பாதுகாப்பு

யாழ்ப்பாணம் வடமராட்சி, கரவெட்டி பிரதேசத்துக்குட்பட்ட இராஜ கிராமத்தில் உள்ள பல குடும்பங்கள் சமூக முடக்கலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

வடமராட்சியில் கொரோனா வைரஸ் தொற்றுடன் நேற்று அடையாளம் காணப்பட்ட மூவரில் ஒருவர் இராஜகிராமத்தைச் சேர்ந்தவர் என்பதால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த முடக்கல் இன்று மாலை முதல் நடைமுறைக்கு வந்துள்ளது எனவும் அவர் கூறினார்.

இராஜகிராமத்துக்குள் வெளியாள்கள் செல்லவோ அல்லது குறித்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேறவோ தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த கிராமத்தில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.