கொரோனா பரவலால் அபாய நிலையில் கொழும்பு – இராணுவத் தளபதி விடுத்துள்ள எச்சரிக்கை

கொரோனா பரவல் காரணமாக கொழும்பில் குறிப்பிடத்தக்களவு அபாய நிலை உள்ளமை வெளிப்படையானது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

எனினும் இதுதொடர்பாக உறுதியாக எதனையும் கூற முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் சிங்கள ஊடகமொன்றில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பின் சில பகுதிகளில் 7 நாள்கள் வரையில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள போதிலும் நேற்றுமுன் தினம் பொரளையில் 20, கொட்டாஞ்சேனையில் 44, மட்டக்குளியில் 36 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான நிலையை அவதானிக்கும்போது, அதாவது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலாக்கப்பட்டுள்ள நிலையிலும் நடமாட்டங்கள் இடம்பெற்றுள்ளமையைக் காணக்கூடியதாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்கள் வீடுகளிலேயே தங்கியிருப்பார்களானால், இவ்வாறான நிலைமை ஏற்படுவதற்கான வாய்ப்பு இல்லை என்றும் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டிருந்தபோதும் திருமண நிகழ்வொன்றுக்கு சென்ற சம்பவம்கூட பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்குமாயின், அவர் தனது வீட்டிலேயே இருப்பாராயின், அவரின் வீட்டைச் சார்ந்தவர்களுக்கு தொற்று ஏற்படுமே தவிர வெளிநபர்களுக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.