இலங்கை வந்த பொம்பியோ மஹிந்தவைச் சந்திக்காமல் சென்றது ஏன்? தூதரக அதிகாரி விளக்கம்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்திருந்த அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ நாட்டில் இருந்து நேற்றுப் பிற்பகல் வெளியேறினார்.

மைக் பொம்பியோ நேற்று முன்தினம் இரவு இலங்கைக்கு வருகை தந்திருந்த நிலையில், நேற்றுக் காலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அதன் பின்னர் ஊடகவியலாளர் மாநாட்டிலும் கலந்து கொண்ட அவர், கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்துக்கும் விஜயம் செய்தார். இந்தநிலையில், அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நேற்றுப் பிற்பகல் 1.06 மணியளவில் விசேட விமானத்தின் ஊடாக மாலைதீவை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்.

மைக் பொம்பியோ, இலங்கை விஜயத் தின்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவையும் சந்திக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. எனினும், மஹிந்தவுடனான சந்திப்பை அவர் இரத்துச் செய்துவிட்டு மாலைதீவு கிளம்பினார்.

இது தொடர்பில் அமெரிக்க தூதரக அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, பொம்பியோவின் விஜயம் குறுகியதொன்றாகவே இருந்தது. அதனால், பிரதமரைச் சந்திப்பதற்கு நேரம் போதவில்லை” எனத் தெரிவித்தார்.