அமெரிக்கா இரட்டை வேடம் போடுகிறது – பொம்பியோவின் கருத்துக்கு சீனத் தூதரகம் அதிரடியாகப் பதில்

இலங்கையுடனான இராஜதந்திர அணுகு முறையில் அமெரிக்கா ஒரே நேரத்தில் இரண்டு வேடங்களைப் போடுகின்றது என கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் குற்றம் சாட்டியுள்ளது.

இலங்கையை சீனா வேட்டையாடுகின்றது என்று இன்று கொழும்பில் வைத்து கருத்து வெளியிட்ட அமெரிக்க இராஜாங்கச் செயலர்மைக் பொம்பியோவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனத் தூதரகம் ருவிட்டரில் இந்தப் பதிவை வெளியிட்டுள்ளது.

அமெரிக்க இராஜாங்கச் செயலர் மைக் பொம்பியோ தனது 2 நாள் உத்தியோகபூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பில் இருந்து புறப்பட்டுள்ளார்.

முன்னதாக இன்று கொழும்பில் வெளியுறவு அமைச்சில் நடைபெற்ற கூட்டு ஊடக மாநாட்டில் உரையாற்றிய பொம்பியோ, சீனா ஒரு வேட்டையாடும் நாடு என்றும், நிலத்திலும் கடலிலும் இறையாண்மையை மீறுகிறது என்றும் கூறினார்.

அமெரிக்கா ஒரு நண்பராகவும் பங்காளியாகவும் இருந்து வருவதாகவும், ஜனநாயக விழுமியங்களின் அடிப்படையில் இலங்கையுடனான கூட்டணியை முன்னோக்கிக் கொண்டு செல்லவிரும்புவதாகவும் அவர் கூறினார்.

இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் சீனத் தூதரகம் வெளியிட்டுள்ள ருவிட்டில், “இலங்கை நட்பையும் ஒத்துழைப்பையும் ஊக்குவிப்பதில் மும்முரமாக இருக்கின்றோம். உங்கள் Alien VS Preadator விளையாட்டு அழைப்பில் ஆர்வம் காட்டவில்லை. அமெரிக்கா எப்போதுமே ஒரே நேரத்தில் இரண்டு வேடங்களில் நடிக்க முடியும்” என்று குறிப்பிட்டுள்ளது.