இலங்கை சீனா உறவுகளில் அமெரிக்கா தலையீடு செய்கின்றது; சீன தூதரகம் கடும் குற்றச்சாட்டு

இலங்கை சீனா உறவுகளில் அமெரிக்கா தலையீடு செய்கின்றது என இலங்கைக்கான சீன தூதரகம் குற்றம்சாட்டியுள்ளது.

அமெரிக்க இராஜாங்க செயலாளரின் இலங்கைக்கான விஜயம் குறித்த செய்தியாளர் மாநாட்டில் அமெரிக்காவின் தலைமை பிரதி உதவி இராஜாங்க செயலாளர் டீன் தொம்சன் இலங்கை சீன உறவுகளில் வெளிப்படையாக தலையிட்டுள்ளார் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை தனது வெளிவிவகார கொள்கைககள் தொடர்பில் அவசியமான மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டு;ள்ளார் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

தொம்சன் வெளியிட்டுள்ள கருத்துக்கள் இராஜந்திர நெறிமுறைகளின் அப்பட்டமான மீறல்என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

மறுநாள் இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் அமெரிக்க அதிகாரியின் கருத்துக்கள் பனிப்போர் காலத்தின் மனோநிலையை வெளிப்படுத்தியுள்ளன என குறிப்பிட்டுள்ளார் எனவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கை சீன மக்களிடையேயான நட்புறவு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்டது என தெரிவித்துள்ள சீன தூதரகம் இதன் காரணமாக இருநாடுகளின் மக்களுக்கும் பரஸ்பரம் உறவுகளை கையாள்வதற்கான அறிவுள்ளது மூன்றாவது தரப்பு இது குறித்து அறிவுரை வழங்க வேண்டியதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளது.

1950 இல் இரு நாடுகளின் மத்தியிலான இராஜதந்திர உறவுகள் ஏற்படுவதற்கு முன்னரே நாங்கள் அமெரிக்காவின் தடைகளையும் உடைத்துக்கொண்டு இலங்கையுடன் ரப்பர் அரிசி உடன்படிக்கையில் கைச்சாத்திட்டோம் என சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

21ம் நூற்றாண்டில் இருநாடுகளும் எந்தவொரு வெளிச்சக்திகளினதும் வற்புறுத்தல்களுக்கும் அடிபணிவதற்கான சாத்தியமில்லை என சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கையின் நேர்மையான நண்பன் என்ற அடிப்படையில் இலங்கை ஏனைய நாடுகளுடன் ஆரோக்கியமான உறவுகளை ஏற்படுத்துவது குறித்து சீனா மகிழ்ச்சியடைகின்றது என தூதரகம் தெரிவித்துள்ளது.

எனினும் அமெரிக்க இராஜாங்க செயலாளரின் விஜயத்தினை பயன்படுத்தி சீனா இலங்கை உறவுகளில் அமெரிக்கா தலையிடுவதையும் இலங்கையை கட்டாயப்படுத்தி மிரட்டுவதை நாங்கள் கடுமையாக எதிர்க்கின்றோம், எனவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.