சீனாவை எதிர்கொள்வதற்காக மேற்குபசுபிக் பிராந்தியத்திற்கு ரோந்து கப்பல்களை அனுப்பும் அமெரிக்கா

மேற்குபசுபிக்கில் ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் தீங்குவிளைவிக்கும் சீனாவின் நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்காக அமெரிக்கா அப்பகுதியில் தனது கடலோர காவல்படையின் ரோந்துகப்பல்களை பயன்படுத்தவுள்ளது.
வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ரொபேர்ட் ஓ பிரையன் இதனை தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவை பசுபிக்கிற்கான சக்தி என வர்ணித்துள்ள ரொபேர்ட் ஓ பிரையன் சீனாவின் அறிவிக்கப்படாத ஒழுங்குபடுத்தப்படாத மீன்பிடிநடவடிக்கை,இந்தோ பசுபிக்கில் உள்ள ஏனைய நாடுகளின் விசேட பொருளாதார வலயங்களில் செயற்படும் கடற்கலங்களை துன்புறுத்தும் செயற்பாடுகள் போன்றவை எங்கள் இறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன் எங்கள் பசுபிக் அயல்நாடுகளின் இறைமைக்கும் ஆபத்தை ஏற்படுத்தி பிராந்தியத்தின் ஸ்திரதன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன எனவும் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த ஸ்திரமின்மையை ஏற்படுத்தும் தீயநோக்கங்களை கொண்ட நடவடிக்கைகளை எதிர்கொள்வதற்கு எல்லை பாதுகாப்பு கடலோர காவல்படையின் ரோந்துகப்பல்களை பயன்படுத்துவது அவசியம் எனவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
தென்பசுபிக்கில் உள்ள பகுதிகளில் கடலோர கண்காணிப்பு கப்பல்களை நிரந்தரமாக நிலை கொள்ளச்செய்வது குறித்து ஆராயப்படுவதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
மைக்பொம்பியோவின் ஆசிய விஜயத்திற்கு முன்னதாக இந்த தகவல் வெளியாகியுள்ளது.

திங்கட்கிழமை அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ஜோன் எப்சருடன் இணைந்து ஆசியாவிற்கான விஜயத்தை அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக்பொம்பியோ ஆரம்பிக்கவுள்ளார்.

இந்த விஜயத்தில் சுதந்திரமான வெளிப்படையான இந்தோ பசுபிக் முக்கிய விடயமாக இடம்பெறவுள்ளது.

மேற்கு பசுபிக்கில் சீனாவின் மோசமான நடவடிக்கைகள் குறித்து அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் ஜுலை மாதத்தில் பட்டியலொன்றை வெளியிட்டிருந்தார்.சீன கடற்படையினர் வியட்நாமின் படகொன்றை மூழ்கடித்தனர் என குறிப்பிட்ட அவர் மலேசியாவின் எண்ணெய் வாயுக்கப்பல்கள் தொந்தரவு செய்யப்படுகின்றன என தெரிவித்திருந்தார்.