ஜனாதிபதியிடம் பாராளுமன்றம் மண்டியிட்டுள்ளது; 20 ஆவது திருத்தம் குறித்து சரத் பொன்சேகா

20 ஆவது திருத்தச் சட்டத்தால் ஜனாதிபதியிடம் பாராளுமன்றம் மண்டியிட்டுள்ளது.அத்துடன், நாடு சர்வாதிகார திசையை நோக்கியே நகரும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தின் இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் ஏற்படும் பாதகங்கள் பற்றி கடந்த காலத்தில் அனைத்து தேர்தல்களிலும் வேட்பாளர்கள் பேசினர். அதனை அடிப்படையாக கொண்டுதான் மக்கள் ஆணையை பெற்றுக்கொண்டார்கள்.

19ஆவது திருத்தத்தில் சர்வாதிகார போக்குடைய ஜனாதிபதி முறையை ஓரளவு குறைத்தோம். மீண்டும் அதற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. ஒரு தனிநபரிடம் அதிகாரங்களை குவிக்காது பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளிடம் அதிகாரத்தை கொடுக்கும் சூழல் உருவாக்கப்பட்டதை மக்கள் ஏற்றுக்கொண்டிருந்தார்.

தேர்தல்களில் எந்தக் கட்சிக்கு வாக்களித்தாலும் ஜனநாயகம் வலுப்படுத்தப்பட வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாகவுள்ளனர். 18ஆவது திருத்தச் சட்டத்தில் ஜனநாயம் குழிதோண்டி புதைக்கப்பட்டடது. தற்போது மீண்டும் 20ஆவது திருத்தச்சட்டத்தில் அதுதான் நடைபெறுகிறது. தனிப்பட்ட சுய லாபம் மனசாட்சியை தாண்டியுள்ளதால் 20ஆவது திருத்தம் கொண்டுவரப்படுகிறது” என்றார்.