விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரிட்டன் அரசு தொடர்ந்து நீடிக்கும்; பிரதமர் மஹிந்த நம்பிக்கை

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை பிரிட்டன் அரசு தொடர்ந்து நீடிக்கும் எனத் தாம் நம்புவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் மீதான பிரிட்டனின் தடை தவறானது என பிரிட்டனின் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் மேன்முறையீட்டு ஆணைக்குழு நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கியிருந்தது.

இந்நிலையில் நேற்று தனது டுவிட்டரில் பிரதமர் மஹிந்த இவ்வாறு பதிவிட்டுள்ளார். “இலங்கை அரசு விடுதலைப் புலிகளைத் தோற்கடித்து பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஆனால், விடுதலைப்புலிகளின் செயல்பாடுகள் உலகம் முழுவதும் மிகவும் சுதந்திரமாகச் செயல்பாட்டில் உள்ளன.

அத்துடன் இது எந்தவொரு நாட்டின் தேசிய பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாகவே இருக்கின்றது. இவ்வாறான நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை பிரிட்டன் அரசு தொடர்ந்து நீடிக்கும் என நம்புகின்றேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.