100 கோடி கொரோனா தடுப்பூசி; சீனாவில் புதிய உற்பத்திச் சாலைகளை அமைக்கத் திட்டம்

கொரோனா தடுப்பு ஊசி மருந்தை 100 கோடி அளவில் உற்பத்தி செய்வதற்கான தொழில்சாலையை நிறுவ சீன மருந்து தயாரிப்பு நிறுவனம் திட்ட மிட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசியை உருவாக்கும் ஆராய்ச்சியில் உலகின் பல்வேறு நாடுகள் ஈடுபட்டுள்ளன.

கொரோனா தொற்றின் தோற்றுவாயாகக் கருதப்படும் சீனாவும் 4 கொரோனா தடுப்பூசிகளை தனது சீனா போர்ம் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் உருவாக்கியுள்ளது.

அந்தத் தடுப்பூசிகளின் பரிசோதனை இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதுகுறித்து மருந்து உற்பத்தி நிறுவனத்தின் தலைவர் லியூ ஜிங்சென், ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்,

சீனா போர்ம் நிறுவனம் உருவாக்கிய இரு கொரோனா தடுப்பூசிகள் எகிப்து, ஆர்ஜென்ரீனா, ஜோர்தான் உள்ளிட்ட 10 நாடுகளில் 50 ஆயிரம் பேருக்குக்கொடுத்து பரிசோதிக்கப்பட்டன.

இந்த தடுப்பூசிகளை அதிக அளவில் உற்பத்தி செய்வதற்காக, பீஜிங் நகரிலும், வுஹான் நகரிலும் இரு உற்பத்தி தொழில்சாலைகள் தயாராகின்றன. இங்கிருந்து அடுத்த ஆண்டில் 100கோடி தடுப்பூசிகள் உற்பத்தியாகிவிடும்” என்றார்.

எனினும், இறுதிக் கட்ட பரிசோதனை முடிவு எப்போது வரும் என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை. இதேவேளை, சீனாவின் தடுப்பூசி ஏற்றப்பட்ட 60 ஆயிரம் பேரில் சிலருக்கு மட்டுமே சிறியளவிலான பக்க விளைவுகள் ஏற்பட்டன என்று தெரிவிக்கப்பட்டது.

எனினும், கொரோனா தடுப்பூசி தயாரிப்பில் சீனா வெற்றி பெற்றாலும், அமெரிக்கா, ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கடும் கட்டுப்பாடுகள் இருப்பதால் உடனடியாக அந்நாடுகளில் சீனாவின் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வராது என்று கூறப்படுகின்றது. ஏனைய நாடுகளுக்கே சீனாவால் தனது மருந்தை விநியோகிக்க முடியும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.